கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் கொண்டாடலாமா?

உலகம் மற்றுமோர் விடுமுறை நாட்களுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. வடபாகம் குளிர்காலத்திற்கும் தென்பாகம் வெயிற்காலத்திற்கும் நேராக நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த விடுமுறை நாட்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றனர் பலரும். பல கிறிஸ்தவ குடும்பத்தினர் டிசம்பர் மாத 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகின்றனர். பல கிறிஸ்தவர்களுக்கு தெரிவதில்லை இதுஒரு பாகால் பண்டிகை. குளிர் காலத்தில் நாளின் அளவு சிறிதாகவும் இரவின் அளவுநீண்டும் இருப்பது இயல்பு. மிகக் குறைந்த நாள் அளவை குளிர்கால பண்டிகை என கொண்டாடினர் பாகாலை வணங்கியோர்.

ஆக இயேசுவின் பிறப்பு எப்போது என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.

வேதாகமத்தில் உள்ள இரண்டு காரணிகள் இயேசு கிறிஸ்து குளிர் காலத்தில் பிறக்க வில்லை என்று தெளிவு படுத்துகிறது.

1. குடிமதிப்பு எண்ணிக்கை. உலகெங்கும் குடிமதிப்பு குளிர்காலத்தில் செய்யப்படுவதில்லை. ஏனெனில் அவரவர் தத்தம் ஊருக்கு செல்ல குளிர் காலத்தில் மிகவும் சிரமப்படுவர். ஆகவே குடிமதிப்பு எண்ணிக்கை நிச்சயம் வேணிற் காலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கமுடியும்.

2. இயேசு பிறந்த அன்று யூதேயாவின் மேய்ப்பர் தங்களது ஆடுகளை வயலில் மேய்த்ததாக வேதாகமத்தில் குறிப்பு உள்ளது. அது மட்டுமல்ல தூதன் தோன்றி நற்செய்தியை அறிவித்து, பின்னர் தூத சேனை தோன்றி தேவனை துதித்ததாக குறிப்பும் உள்ளது. குளிர்காலத்தில் மேய்ப்பர் தத்தம் ஆடுகளை தம் தொழுவத்தில் வைப்பது வழக்கம். ஏனெனில் யூதேயாவில் குளிர்காலத்தில் பனியும் மழையும் பெய்யுமாதலால் ஆடுகள் நனையாதிருக்க தொழுவத்தில் கூரை போட்டு வைப்பர்.

இவ்விரண்டு நிகழ்வுகளும் இயேசு பிறந்தது குளிர்காலத்தில் அல்ல என்பது தெளிவாகிறது.

பல ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள் இயேசு கிறிஸ்துவின் சரியான பிறந்த தேதியை கணிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். சிலர் அவர் மார்ச் மாதத்தில் பிறந்ததாகவும், சிலர் செப்டம்பர் என்றும், சிலர் நவம்பர் என்றும் கூறுகின்றனர்.

இந்த விவாதம் முடிவில்லாததினால் அதை வரலாற்று பெருந்தகைகளிடம் விட்டு விடுவோம். இயேசுவை நாம் எல்லா நாட்களிலும் கொண்டாடுவோம். ஏனெனில் அவரே நம் இரட்சிப்பின் ஆணிவேர்.

பவுலடியார் கூறியதையும் நினைவில் கொள்வோம்

ரோமர் 14:5-6
அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும்கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும்கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.

கலாத்தியர் 4:8-11
நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.

கொலோசேயர் 2:16
ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

மூன்றிலும் முரணாக அல்லவா எழுதியிருக்கிறார். எதை கடைப்பிடிப்பது?

பவுல் எழுதிய சபைகளின் அன்றைய சூழலைப் பார்க்க வேண்டும்.

ரோமரில் சபையாரும், சமூகமும் யூதப் பண்டிகையை ஆசரிக்கவில்லையெனில் குற்றம் என்று கண்டனர். ஆகவே யூதப் பண்டிகைகள் ஆசரித்தலோ அல்லது ஆசரிக்காமல் விடுதலோ தேவனுக்கு நன்றியறிவித்தலோடே செய்ய பணிக்கிறார் பவுல்.

கலாத்தியரில், சபையார் வேற்று மதத்தினரது பண்டிகைகளை ஆசரிப்பதை தடுக்கிறார்.

கொலோசேயரில், யாரும் குற்றப்படுத்தாத படி நடந்து கொள்ள கூறுகிறார்.

இவை எல்லாவற்றிலும் "கிறிஸ்தவர்"களும் உலகமும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் போது நாம் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த முகாந்திரத்தை முன்னிட்டு சுவிசேஷம் அறிவிப்போம். பகட்டான உணவு மற்றும் அலங்காரம் விடுத்து அந்த பணத்தை சுவிசேஷம் பரப்பவும் ஏழைகள் பசியாறவும் செலவிடுவோம்.

இந்த கிரியைகளில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே. நம்மில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரை நாம் ஆனந்தமாக வைப்பது நம்முடைய தலையாய கிரியை.

தேவ ஆவியானவர் உங்களை மேலும் போதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment