கடைசி காலங்கள் - பகுதி 2 (கள்ள கிறிஸ்துக்கள்)

மீட்பர் இயேசு கடைசி காலங்களைக் குறித்த அடையாளம் என்று குறிப்பிடும் போது முதலில் சொல்வதைக் காணுங்கள்

லூக்கா 23:7-8 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொண்டு வரும் இவர்கள் யார்? கிறிஸ்து நான் என்பது தான் கிறிஸ்தவன் ஆயிற்றோ என இன்றைய கிறிஸ்தவர்களை கண்டால் நினைக்கத் தோன்றுகிறது.

சினத்திற்கு விரைவாகவும், பொறுமைக்கு தாமதமாகவும் இருக்கும் கிறிஸ்தவர்களை கண்டால் இதையே நினைக்கத் தோன்றுகிறது.

இயேசு தான் செய்யாத தப்பிற்காக சிலுவையில் தொங்கி நம் பாவங்களை எல்லாம் சுமந்தாரே. அந்த அநாதி அன்பை பிரதிபலிக்காத யாரும் கிறிஸ்தவன் என்று கூறினால், அவர்கள் வெறும் நாமத்தை தரித்துக் கொண்டவர்கள் தானே.

கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து இயேசு சொல்லும் போது "அவர்களின் கனிகளால் அறிவீர்கள்" என்று எச்சரிக்கிறார். 

ஆவியின் கனி என பவுல் மூலமாக ஆவியானவர் வெளிப்படுத்திய 9 குணாதிசங்கள்

அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்

இவைகளில் ஏதேனும் ஒன்று இல்லையெனில் அவர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக இருக்க முடியும்?

ஒவ்வொரு குணாதிசயமும், கிறிஸ்து தன் வாழ்வில் வெளிப்படுத்தினார். அவர் வைராக்கியத்திற்காக சினங்கொண்டார் என்று எப்போதும் சினங்கொள்ளுதல் தவறு. அவர் காட்டிய மனதுருக்கம், சாந்தம், தன்னை சிலுவையில் அறைந்தவரைக் கூட மன்னிக்கும் படியாக பிதாவிடம் ஜெபம், இவைகளே அதிகம்.

இயேசுவைப் போல வாழ்க்கையில் அவர் வெளிப்படுத்திய ஆவியின் கனியை நாம் வெளிப்படுத்துவோம். கிறிஸ்துவைப் பிரதிபலிப்போம்.

ஆவியானவர் தாமே உங்களை வழிநடத்துவாராக. ஆமென்.

No comments:

Post a Comment