தேவனுக்கு கீழ்படிதல்

மத்தேயு 4ல் நாம் படிக்கிறோம் இயேசு கலிலேயா முழுவதும் நடந்து சென்று சகல மக்களின் சகலவிதமான பிணிகளையும் போக்கினார்.

இந்த உலகத்தை, அண்ட சராசரத்தை உண்டாக்கிய, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், இயேசு நடந்து சென்றார். தாழ்மையின் மிகப் பெரிய சான்று இயேசுவே. இரண்டொரு சமயங்களில் அவர் நீரின் மேலும் நடந்து செல்கிறார்! 

அவர் வாழ்ந்த நாட்களில் பிரயாணம் செய்ய வேறு வழியில்லை என்று நினைத்தால், அது தவறு. ரோமர் எருசலேமை ஆண்ட நாட்கள். குதிரைகள், வண்டிகள், தேர்கள் என்று போக்குவரத்து வசதிகள் மிகுதியாய் வர ஆரம்பித்து விட்டன. இன்றைய நிலைமை போலே இல்லையென்றாலும், கால்நடையாகச் செல்வது மிக மிக எளிய வழியில் செல்லும் பயணமே.

இயேசு தன் சீடர்களையும் கால்நடையாகவே அனுப்புகிறார். (பன்னிருவர் மற்றும் எழுபது சீடர்கள், இரண்டிலும் ஒரேயொரு தடி தான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது)

நாம் நம்முடைய வாழ்வில், சீராய் பயணம் இல்லையே என்று எவ்வளவு முறை பயணம் செல்லாது இருந்திருப்போம்? 2ம் வகுப்பு, முன்பதிவு இல்லாத இரயிலில் சென்று எவ்வளவு நாட்கள் ஆயிற்று?

தேவன் உங்களை ஏதாவது செய்யச் சொன்னால் அதில் ஏதோ ஒரு நோக்கத்தை வைத்திருப்பார் என்பதை நம்புங்கள். 

ஒரு சாட்சியை நான் படித்த ஞாபகம். எந்த புத்தகம் என்று நினைவில்லை. ஆசிரியர் பெயரும் நினைவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சி மிக நன்றாக நினைவில் உள்ளது.

ஒரு மனிதன் தனிமையினால் விரக்தி அடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறான். குடிப்பழக்கம் அவன் தனிமையை மேலும் அதிகரித்து அவனை தற்கொலைக்கு நடத்துகிறது. ஒரு நாள் அவன் குடித்து விட்டு, இனிமேல் இந்த வாழ்க்கை எதற்கு? என் இல்லம் சென்று என் துப்பாக்கியால் என்னை மாய்த்துக் கொள்வேன் என்று கூறிவிட்டு, அவன் செல்கிறான்.

வீடு நோக்கி செல்லும் போது மழை கொட்ட ஆரம்பிக்கின்றது. மழையில் நனைந்தபடியே செல்கிறான். அவன் வீடு இருக்கும் சந்திற்கு வந்த போது மூலையில் இருக்கும் விளக்கு மரத்தின் கீழ் ஒரு மனிதன் நனைந்தபடி நிற்பதை காண்கிறான். நனைந்தபடி நின்றிருந்த மனிதர் அவனை நோக்கி புன்னகைக்கிறார். அவரை முறைத்து விட்டு செல்லும் போது அந்த மனிதர் அவனை நோக்கி, "நண்பனே இயேசு உன்னை நேசிக்கிறார்" என்று சொல்ல, குடிகாரன் அதிர்ச்சியில் திரும்பி ஓ வென அழுது கர்த்தரிடம் திரும்புகிறான்,.

இந்த விளக்கு மரத்த்தின் கீழ் இருந்தவர் ஒரு போதகர், அவர் வீட்டில் இரவு உணவின் பாதியில் ஆவியானவர் உணர்த்த, அவர் நடந்து அந்த விளக்கு மரத்தின் கீழ் காத்திருக்கிறார். மழை வந்த போதும், சொட்ட சொட்ட நனைந்து காத்திருக்கிறார். 

இந்த போதகருக்கு ஒரு சபை உண்டு. அவருக்கு ஒரு குடும்பம் இருந்திருக்கலாம். இவர்களையெல்லாம் விட்டுவிட்டு 99 ஆடுகளை வயலில் விட்டுவிட்டு தொலைந்த ஒரே ஆட்டை தேடிச்சென்ற மேய்ப்பன் போல் செல்ல ஆண்டவரின் சொல்லிற்கு போதகர் கீழ்படிந்தார்.

நாம் அந்த போதகரின் நிலையில் இருந்தால் கீழ்படிவோமா? மனைவியிடம் என்ன சொல்லிவிட்டு போயிருப்பார்? பாதி உணவில் எழுந்து செல்ல என்ன அவசியம்?

கீழ்படிதல் என்பது ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் பிரதான கட்டளை, 

1 பேதுரு 4ல் நாம் வாசிக்கிறோம்

    1. இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

    2. ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

தேவனுடைய சித்தத்திற்கு பிழைத்திருப்போம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


No comments:

Post a Comment